Monday, February 04, 2008

தடயம் - அத்தியாயம் - 9

சந்தானமும், செல்வமும் சென்ற சந்தானத்தின் கார், அருள்மொழியின் வீட்டுத் தெருவில் நுழைந்தது.

அருள்மொழியின் வீட்டு வாசலில் சந்தானத்தை எதிர் பார்த்தது போல நின்றிருந்த அருள்மொழியின் முகத்தில் தெரிந்த கலவரத்தைப் பார்த்து செல்வமும், சந்தானமும் அதிர்ந்தனர்.

"என்ன அருள்மொழி என்ன ஆச்சு?"

"சந்தானம், என் மகளைக் கடத்திட்டாங்க"

"வாட்!! யாரு? எப்ப? எப்படி? எதுக்காக? மேல் விவரம் சொல்லுங்க" என்று பரபரத்தார் சந்தானம்.

"சந்தானம் சார், நீங்க இவ்வளவு எமோஷனலாகி நான் பார்த்ததே இல்லை, கொஞ்சம் அமைதியா இருங்க நான் விசாரிக்கறேன்" என்று அவரை சமாதானப் படுத்தினார் செல்வம்.

"அருள்மொழி சார், போலீஸுக்கு சொல்லிட்டீங்க இல்லை, கவலைப் படாதீங்க இனி நாங்க பாத்துக்கறோம்."

"அதுதான் வேண்டாம்னு நான் சந்தானத்தை கூப்பிட்டேன், நீங்களும் வருவீங்கன்னு தெரியாது. அவங்களோட முதல் கண்டிஷன், நான் போலீஸுக்கு போகக் கூடாதுங்கரது. சந்தானம் என் நண்பர் அதனால அவரை கன்சல்ட் பண்ணலாம்னு வரச்சொன்னேன். கூடவே நீங்களும் வருவீங்கன்னு தோணலை"

"அருள்மொழி சார், போலீஸ் டிப்பார்ட்மெண்ட்டோட தினம் தினம் பழகிட்டு நீங்களே இப்படி ஒரு க்ரிமினலுக்கு பயந்தா, அப்பரம் பொது மக்கள் என்ன செய்வாங்க. முதல்ல, என்ன நடந்ததுன்னு கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க"

"நான் அங்க தேவராஜ் வீட்டில இருந்தப்போ, என் வீட்டில இருந்து போன் வந்தது, அங்க இருந்து என் மகள் பேசினாள். வீட்டுக்கு உள்ள ஒரு 5-6 பேர் வந்திருக்கரதாகவும், அவங்க என்கிட்ட பேசனும்னு சொன்னதாகவும், ஒவ்வொருத்தரும் கத்தி, துப்பாக்கின்னு வெச்சுருக்கரதாகவும், சொன்னாள். நான் அந்த ஆளுங்க கிட்ட அப்பவே பேசினேன், அவங்க சீக்கிரம் நான் என் வீட்டுக்கு வரனும்ன்னும், இல்லைன்னா என் அடுத்த கேஸ் என் வீட்டில நடக்கப் போற அசம்பாவிதம்தான்னும் சொன்னாங்க. அதனால நான் உடனே கிளம்பி வந்தேன்."

"அப்புறம்"

"நான் நேரா என் வீட்டுக்கு வந்தேன், என் மனைவி மட்டும் தான் அழுதுகிட்டு இருந்தாள். என்ன ஆச்சுன்னு விசாரிச்சதுல வந்தவங்க அவளை மிரட்டி உட்கார வெச்சுட்டு, என் மகளைக் கடத்திகிட்டு போயிட்டாங்கன்னும், நான் வந்ததும் அவங்க கிட்ட பேசினா எல்லாம் சரியாகிடும், என் மகளுக்கு எந்த ப்ரச்சனையும் வராதுன்னும், சொல்லிட்டு போயிருக்காங்க. அவங்க போய் 2-3 நிமிஷத்தில நான் வந்துட்டேன்."

"உங்க மகள் போட்டோ ஒன்னு கொடுங்க, அதோட அவங்க பேர், வயசு விவரம் சொல்லுங்க"

"போட்டோ தரச் சொல்றேன், அவ பெயர், க்ருத்திகா, வயசு, 22."

"க்ருத்திகா, எங்கயாவது வேலைக்குப் போறாங்களா? இல்லை படிச்சுகிட்டிருக்காங்களா?"

"அவ இப்பதான் ஒரு தனியார் கம்பெனில வேலைக்குப் போக ஆரம்பிச்சிருக்கா. கை நிறைய சம்பளம். அவளுக்கு இந்த வருட கடைசில கல்யாணத்திற்கு பார்க்கலாம்னு இருந்தோம், அதுக்குள்ள இப்படி ஆகிப் போச்சு" என்றபடி கலங்கத் துவங்கினார்.

"ஆமா, நான் உங்ககிட்ட பேசினபோது நீங்க ஏன் இதைப் பத்தி எதுவும் சொல்லலை" என்று கேட்டார் சந்தானம்.

"நீங்க அப்ப பேசினபோது அவங்க யாரு என்ன விஷயம்ன்னு தெரிஞ்சுகிட்டதும் உங்ககிட்ட சொல்லாம்னு இருந்துட்டேன். "

"இப்ப அவங்க யாருன்னு கண்டு பிடிச்சிட்டீங்களா?"

"இல்லை. அதனாலதான் நான் உங்களுக்கு போன் பண்ணி பார்த்துட்டு, நீங்க போன் எடுக்கலைன்னதும், செல்வத்துக்கு போன் பண்ணி உங்களை உடனே இங்க வரச் சொன்னேன்."

"அவங்க கிட்ட பேசினீங்களே, அவங்க டிமாண்ட் என்ன"

இதைக் கேட்டவுடன், அவருடைய முகம் சட்டென்று மாறுவதை செல்வம் கவனித்தார்.

"டிமாண்ட்-னு ஒன்னும் இல்லை"

"நிஜமாவா!, ஹூம் இண்ட்ரஸ்டிங்" என்றபடி சந்தானம் யோசிக்கத் துவங்கினார்.

"இப்ப உங்க மனைவி எங்க?"

"உள்ள இருக்கா செல்வம், ஏன் கேக்கரீங்க?"

"அவங்களைப் பார்த்து, கொஞ்சம் விசாரிக்கனும்."

"செல்வம், அவ இப்ப யார்கிட்டயும் பேசர நெலமைல இல்லை. ப்ளீஸ், கொஞ்சம் புரிஞ்சுக்கங்க."

"உங்க வீட்டுப் பெண்ணை தூக்கிட்டு போனவங்க யாரு? அவங்களுக்கு என்ன வேணும்? ஏன் ஒன்னும் டிமாண்ட் பண்ணலைன்னு தெரியனும். அவங்களுக்கு உங்க வீடு தெரிஞ்சிருக்கு, அவங்களை உங்க மகளும் மனைவியும் பார்த்திருக்காங்க, அவங்க அடையாளம் சொன்னா எங்களால அந்த ஆளுங்களை ஈசியா ட்ரேஸ் பண்ண முடியும். அதனால அவங்கள கொஞ்சம் வரச்சொல்லுங்க" இப்போது சந்தானத்தின் குரலில் சற்று கண்டிப்பு தெரிந்தது. இதைக் கேட்டதும், அருள்மொழிக்கும், சற்று திகைப்பாகத்தான் இருந்தது. அதைவிட செல்வத்திற்கு, சந்தானம், நிதானத்திற்கு வந்துவிட்டார் என்பது தெரிந்தது.

அப்போது அருள்மொழி, "சந்தானம், எனக்கு உதவி பண்ணுவீங்கன்னு வரச்சொன்னா, என்னையே கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க?"

"அருள்மொழி, உங்களை கேள்வி கேக்கரது, உங்களுக்கு ஹெல்ப் பண்றதுக்குத்தான். கொஞ்சம் நிதானமா, எங்க கேள்விக்கு பதில் சொல்லுங்க."


அருள்மொழி சற்று சங்கடத்துடன், "சரி கேளுங்க" என்றார்.

"ஓளிக்காம சொல்லுங்க, அவங்க டிமாண்ட் என்ன?"

"சந்தானம், அதுதான் முன்னாடியே சொன்னேனே, அவங்க டிமாண்ட் னு ஒன்னும் கேக்கலை"

"ரியலி!!, என்ன அருள்மொழி உங்களுக்கு தெரியாதா? யார் பொய் சொல்றாங்க, யார் நெஜம் சொல்றாங்கன்னு எங்க சர்வீஸ்ல, பார்த்த உடனே எங்களால சொல்ல முடியுமே?" என்றார் செல்வம்.

சந்தானம் பார்வையாலேயே செல்வத்தை அடக்கி விட்டு, "அருள், போலீஸ் கிட்ட மறைக்காதீங்க, சொல்லுங்க, அவங்க டிமாண்ட் என்ன?"

"சந்தானம், அப்படி ஒன்னும் இல்லை" என்று கெஞ்ச ஆரம்பித்தது அருள்மொழியின் குரல்.

"டாமிட், சொல்லுங்க அருள். மாட்டிகிட்டு இருக்கிறது உங்க மகள் மட்டும் இல்லை, என் அக்கா மகன் தேவராஜும்தான். ரெண்டு பேரையும் கடத்தியிருக்கிறது ஒரே கும்பல்தான். நீங்க தயங்கர ஒவ்வொரு நிமிஷமும் அவங்க உயிருக்கு ஆபத்து. So, சீக்கிரம் சொல்லுங்க" என்று இறைந்தார் சந்தானம்.

"சரி, இனிமே மூடி மறைச்சு ஒன்னும் ஆகப் போகரதில்லை, நடக்கரது நடக்கட்டும். அவங்க டிமாண்ட் என்னன்னா...." என்று அருள்மொழி சொல்லத் துவங்கினார்.

(தொடரும்)

தடயம் - அத்தியாயம் - 8

சந்தானம், "ஏன்யா, இவ்வளவு நடந்திருக்கு, இங்க அக்கம் பக்கத்தில இருந்த ஒருத்தர்கூட போலிஸை கூப்பிடலயா, என்ன கிண்டல் பண்றாங்களா?" என்றார்.

அதற்கு கந்தசாமி, "சார் அவங்க கிண்டல் பண்ணல, அவங்க போலீஸ் கம்ளைய்ண்ட் கொடுக்காததற்கு காரணம் என்னன்னா...." என்று அவர் சொன்ன காரணத்தை கேட்டு செல்வமும், சந்தானமும் திடுக்கிட்டனர்.

செல்வம் பதட்டத்துடன், "என்ன கந்தசாமி சொல்றீங்க, நீங்க சொல்றது நிஜமா?"

"யெஸ் சார்"

சந்தானம் அறையின் குறுக்கும் நெடுக்கும் நடக்க ஆரம்பித்தார், அவர் நடக்க ஆரம்பித்ததும் அனைவரும் பேசுவதை நிறுத்திக் கொண்டனர்.

ஒரு ஐந்து நிமிடம் மெளனமாக நடந்து கொண்டிருந்த அவர், சட்டென்று நின்றார். திரும்பி கந்தசாமியைப் பார்த்து, "அதாவது, சண்டை போட்டுட்டு வெளியே போனவன் திரும்பி வந்த போது அவனோட 3 ஆட்டோல வந்தது அவனுடைய ஆளுங்க. அவங்க இங்க தேவராஜ் குடி வரதுக்கு 4-5 மாசங்களுக்கு முன்னாடி ஒரு ஆளை பட்டப் பகல்ல வெட்டி போட்டிருக்காங்க அதனால இங்க இருக்கரவங்களுக்கு அவனைக் கண்டா பயம், so, அவங்க போலீஸுக்கு போன் பண்ணல. இப்போ இங்க குடியிருக்க ஒருத்தர் வீட்டிலேயே ஒரு கொலை நடந்திருக்கு, குடியிருந்த ஒரு இளைஞனைக் காணலை, அதனால அவங்க சாட்சி சொல்ல ரெடியா இருக்காங்க, ம் ம் வெரி இண்ட்ரஸ்டிங்" என்றவர், செல்வம் பக்கம் திரும்பி "இந்த கான்சப்ட்ல நிறைய ஓட்டை இருக்கு அதை அப்புறம் பாக்கலாம்." கந்தசாமியைப் பார்த்து "நீ மேல சொல்லுய்யா" என்றார்.

அவருடைய மரியாதையில்லாத தொணி கந்தசாமிக்கு வருத்தத்தைக் கொடுத்தாலும், மேலதிகாரி என்பதால் அவரால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அதைப் புரிந்து கொண்ட செல்வம், "குமரேசன் நீங்க சொல்லுங்க" என்றார்.

"சார், வீட்டு உள்ள ஒருத்தன் அடிவாங்கி கத்தும் சத்தத்தை கேட்டுட்டு வெளியில இருந்த மிச்ச பேரும் உள்ள போயிருக்காங்க, கொஞ்ச நேரம் கழிச்சு எல்லோரும் வெளியில வந்திருக்காங்க, அவங்க தேவராஜ இழுத்துகிட்டு போயிருக்காங்க."

"உள்ள தேவராஜ்கூட இருந்த ரெண்டு பேர் என்ன ஆனாங்க?"

"தெரியலை, போகும் போது வாசல் விளக்கை அணைச்சிட்டு போயிருக்காங்க, அதனால இங்க இருந்தவங்களுக்கு யாரெல்லாம் வெளியில வந்தாங்கன்னு தெரியலை, ஆனா அவங்க தேவராஜ இழுத்துட்டு போனது மட்டும் சுமாரா தெரிஞ்சிருக்கு."

"போலீஸுக்கு யார் போன் பண்ணினது"

"இங்க இருக்கரவங்க யாரும் பண்ணல. ஆனா இதெல்லாம் நடந்து முடிச்ச போது மணி 1 ல இருந்து 1:30 க்குள்ள இருக்கும்".

உடன் சந்தானம் துள்ளி குதித்து, "அப்பதான் எனக்கு போன் வந்தது"

செல்வம் அதற்கு, "அது சரியா இருக்கு, ஆனா, அதுக்கு அப்பரம் ஒரு 7 மணி நேரம் கழிச்சு எங்களுக்கு போன் பண்ணினது யாரு?" என்று குழப்பத்துடன் கேட்டார்.

சந்தானம், கந்தசாமி மற்றும் குமரேசனைப் பார்த்து, "வெரி குட் நல்லா கண்டு பிடிச்சிருக்கீங்க, இதை ஒரு ரிப்போர்ட்டா சீக்கிரம் கொடுங்க, இப்ப நீங்க ரெண்டு பேரும் புறப்படலாம்" என்றார்.

அவர்கள் அறையை விட்டு போகும் வரை மெளனமாக இருந்த அவர், செல்வத்தைப் பார்த்து, "என்ன செல்வம் என்ன நினைக்கிறீங்க இந்த கேசைப் பத்தி" என்று கேட்டார்.

"நீங்க குறிப்பிட்ட அந்த ஓட்டைகளைப் பத்தி யோசிச்சிட்டு இருந்தேன்."

"அந்த ஓட்டைகளை நான் பாத்துக்கறேன், நீங்க உருப்படியா வேற ஏதாவது தோணினா சொல்லுங்க."

"சார் நான் என்ன சொல்ல வர்றேன்னா...." என்று செல்வம் இழுக்கத் துவங்க.

"செல்வம், அந்த ஓட்டைகளைப் பத்தி நான் பார்த்துக்கறேன்னு ஒரு தடவை சொன்னா உங்களுக்குப் புரியாதா? போய் துரைக்கு ரிப்போர்ட் தயார் பண்ணுங்க. மிச்சத்தை நான் பாத்துக்கறேன்."

செல்வம் ரொம்ப அடிபட்டவர் போல சந்தானத்தைப் பார்த்தார். பிறகு, "சார், இந்த கேஸ்ல நீங்களும் நானும் ஒன்னா ஒர்க் பண்றதாதான் முடிவு பண்ணினோம், நீங்க பேசரத பார்த்தா, நான் உங்களுக்கு ரிப்போர்ட் பண்றேன்னு முடிவு பண்ணிடீங்களா? இது என் ஜூரிஸ்டிக்ஷன்ல நடந்திருக்கிர கொலை மற்றும் ஆள் கடத்தல், இதை கண்டுபிடிக்க என்னை தடை செய்ய உங்களுக்கு எப்படி உரிமை இருக்குன்னு தெரியலை. நான் துரைக்கு ரிப்போர்ட் அனுப்பிட்டு உங்ககிட்ட பேசறேன்." என்றபடி வாசல் புறம் நோக்கி சென்றார்.

சந்தானம், செல்வம் சென்ற திசையை நோக்கி சற்று நேரம் திகைப்போடு பார்த்த படி இருந்தார். பிறகு, சடாரென்று எழுந்து கொண்டு, அறையில் குறுக்கும் நெடுக்கும் நடை போட ஆரம்பித்தார்.

இது வரை நடந்த அனைத்தையும் மனதில் அசை போட ஆரம்பித்தார், அவருக்கு கந்தசாமியும், குமரேசனும் சேகரித்துச் சொன்ன செய்தியில் இருந்த அபத்தங்கள், ஓட்டைகள் தெளிவாகப் புரியத் துவங்கியது. அருகில் இருந்த மேசையிலிருந்து ஒரு பேப்பரை எடுத்து எழுதத் துவங்கினார்.

அப்போது அறையின் உள்ளே செல்வம் தயங்கி நிற்பதைப் பார்த்தார்.

"வாங்க செல்வம், என்ன துரைக்கு ரிப்போர்ட் தயார் பண்ணிட்டீங்களா? கோபமெல்லாம் இன்னும் இருக்கா, இல்லை கொஞ்சமாவது குறைஞ்சதா?" என்றார்.

"துரைக்கு ரிப்போர்ட் அனுப்பிட்டேன். கோபமெல்லாம் இல்லை. வருத்தம்தான் அதிகமா இருக்கு. தேவராஜ் உங்க சொந்தம்ங்கரதால உங்களுக்கு இந்த கேஸ்ல ஆர்வம் அதிகமா இருக்கு, ஆனா, அதனால நீங்க எத்தனை பேரை காயப் படுத்தரீங்கன்னு உங்களுக்குப் புரியுதான்னு தெரியலை"

"புரியுது செல்வம், நான் கொஞ்சம் வரம்பு மீறி தான் இந்த கேஸ்ல நடந்துக்கறேன். அதுக்கு தனித் தனியா நான் உங்க கிட்ட அப்புறம் மன்னிப்பு கேட்டுக்கறேன். இப்ப இந்த பாயிண்ட்ஸ பாருங்க, இதுல ஏதாவது விட்டுப் போயிருந்தா சொல்லுங்க?"

அவர் காட்டிய காகிதத்தில் ஒன்று ரெண்டு என்று வரிசைப் படுத்தி 10 பாயிண்ட்ஸ் எழுதியிருந்தது.

1. கொலை நடந்தது நடு இரவு 1:30
2. சந்தானத்திற்கு செய்தி உடனே சொல்லப்பட்டது
3. செல்வத்திற்கு 7 மணி நேரம் கழித்து சொல்லப்பட்டது
4. செய்தி சொன்னவர்கள் இங்கிருப்பவர் யாரும் இல்லை
5. கொலை குரூரமாக நடந்திருக்கிறது
6. கொலை செய்தவர்களுக்கு இங்கு நடப்பது உடனுக்குடன் சொல்லப் பட்டிருக்கிறது
7.கொலையாளிகளில் ஒரு ஆள் வேவு பார்க்கவும், சமயம் கிடைக்கும் போது ஒரு தடயத்தை வைக்கவும் இங்கிருந்திருக்கிறான். அவனை இங்கிருந்தவர்கள் யாரும் பார்க்கவில்லை.
8. சரியான சமயத்தில் அந்த கும்பலால் அருள்மொழியை இங்கிருந்து அப்புறப் படுத்தவும் முடிந்திருக்கிறது
9. என்னுடைய செல் போன் விவரம் தெரிந்து அதில் என்னை தொடர்பு கொண்டு என்னுடன் மிரட்டலாகப் பேசவும் தைரியம் உள்ள கும்பல் இது.
10. என்னைப் பற்றிய பல விவரங்கள் தெரிந்துள்ள கும்பல் இது.

"செல்வம், எனக்கு வந்த காலை ட்ரேஸ் பண்ணச் சொன்னேனே அது என்ன ஆச்சு? ஜன்னலுக்கு வெளியில பார்த்த ஷீ மார்க் ப்ரிண்ட்ல இருந்து ஏதாவது தெரிஞ்சுதா? உள்ள கிடந்த கத்தியில இருந்த ரத்தம் யாருடையது?"

"சார், உங்களுக்கு வந்த காலை ட்ரேஸ் பண்ணினதுல அது ஒரு PCO-ல இருந்து வந்த கால்ன்னு தெரிஞ்சுருக்கு, அங்க விசாரிக்க ஆள் அனுப்பியிருக்கேன்"

"வெரி குட்"

"ஷீ மார்க்ல இருந்து பெரிசா ஒன்னும் க்ளூ இல்ல, அதுல முன் பக்கம் அழுத்தமான ப்ரிண்ட்டும் குதிகால் ப்ரிண்ட் அவ்வளவு சரியாவும் இல்லை"

"அப்படியா!"

"ஆமாம்"

"அந்த ரத்தம் யாருடையது"

"கத்தியில இருந்த ரத்தம் பைக் குமாரொடதுதான்"

"வெரிகுட், கொஞ்சம் என்கூட வாங்க"

"எங்க சார்"

"எனக்கு அந்த ஷீ மார்க் இருந்த ஜன்னல் கிட்ட ஒரு விஷயம் பார்க்கனும்"

ஓட்டமும் நடையுமாக இருவரும் அந்த ஜன்னலருகே வந்தனர்.

"செல்வம், இந்த ஜன்னல் தரையிலிருந்து 6 அடி உயரத்தில இருக்கு, அந்த கத்தியை இங்கிருந்து போட்டவனுக்கு உயரம் பத்தலை, அதனால எக்கி நின்னு போட்டிருக்கான் அதனாலதான் ஷீ முன் பக்கம் மார்க் நல்லா இருக்கு, குதிகால் மார்க் அவ்வளவு சரியா இல்லை. அதை கன்பர்ம் பண்ணிக்கத்தான் வந்தேன். வாங்க உள்ள போகலாம்"

"ப்ரில்லியண்ட். இது எனக்கு தோணவே இல்லை"

"இட்ஸ் ஓகே. வாங்க நாம கண்டுபிடிக்க வேண்டியது நிறைய இருக்கு"


அப்ப சந்தானத்தின் செல் போனில் கால் வந்தது.

"செல்வம் என் வீட்டுல இருந்து போன், நீங்க அருள்மொழி ஆளுங்க என்ன கண்டு பிடிச்சாங்கன்னு விசாரிங்க நான் இந்த காலை அட்டண்ட் பண்ணிட்டு உள்ள வரேன்"

"சொல்லும்மா, என்ன விஷயம்"

"நீங்க எங்க இருக்கீங்க"

"ஒரு கேஸ் விஷயமா வந்திருக்கேன். ஏன் என்ன விஷயம்?"

"கொஞ்ச நேரம் முன்னாடி ஒரு போன் வந்தது அதுல நம்ம தேவராஜ யாரோ கடத்திட்டதாவும், அவங்கள உங்களால கண்டு பிடிக்க முடியாதுன்னும் சொன்னாங்க. ஏங்க, நம்ம தேவராஜ கடத்திட்டாங்களா?"

"ஆமாம்மா, அதைத்தான் விசாரிச்சுகிட்டு இருக்கேன். கவலைப் படாதே, நான் அவனை கண்டு பிடிச்சு எப்படியும் வீட்டுக்கு கூட்டிகிட்டு வரேன்."

என்றபடி போனை கட் பண்ணி விட்டு உள்ளே வந்தார்.

செல்வம், சற்று தயங்கியபடி வந்தார்.

"என்ன செல்வம், என்ன விஷயம்?"

"சார், அருள்மொழி போன் பண்ணினார், உங்க செல் போனுக்கு போன் பண்ணினாராம், லைன் கிடைக்கலேன்னு எனக்கு போன் பண்ணினார்"

"அருள்மொழி என்ன சொன்னார்" என்று சந்தானம் பரபரப்பானார்.

"உங்கள உடனே அவரோட வீட்டுக்கு வரச் சொன்னார்"

"ஹூம், அருள்மொழி தேவையில்லாம என்னை உடனே வரச்சொல்லியிருக்க மாட்டார், நான் போய் பாக்கறேன். இங்க அவரோட ஆட்கள் என்ன கண்டு பிடிச்சாங்க?"

"அதிகம் இல்லை, அவங்க லேபுக்கு போய் பல டெஸ்ட் பண்ண வேண்டியிருக்கிறதால அங்க போயிருக்காங்க."

"நீங்க இங்க ரெண்டு கான்ஸ்டபிள்ஸ காவலுக்கு போட்டுட்டு, என் கூட வாங்க நாம் அருள் மொழியை பார்த்துட்டு வரலாம்"

"ஒரு 10 நிமிடம் கொடுங்க, நீங்க சொன்ன ஏற்பாட்டை செய்துட்டு வரேன்" என்ற படி, வாசல் புறம் விரைந்தார்.

சந்தானம், அடுத்த 10 நிமிடமும், வீட்டை மீண்டும் ஒரு முறை தீவிரமாக பார்வையிட்டார், சில குறிப்புகளை எழுதிக் கொண்டார். அப்போது செல்வம் உள்ளே வந்து "போகலாமா சார்" என்றார்.

"யெஸ் வாங்க"

இருவரும் வெளியே வந்தார்கள்.

"செல்வம், என் காரிலேயே போயிடலாம், ஜீப் வேண்டாம்."

'ஓகே சார்"

15 நிமிடங்களுக்குப் பிறகு அவர்கள் கார், அருள்மொழியின் வீட்டுத் தெருவில் நுழைந்தது.

அருள்மொழியின் வீட்டு வாசலில் சந்தானத்தை எதிர் பார்த்தது போல நின்றிருந்த அருள்மொழியின் முகத்தில் தெரிந்த கலவரத்தைப் பார்த்து செல்வமும், சந்தானமும் அதிர்ந்தனர்.

(தொடரும்)